சினிமா
தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்! – ஹீரோ யார் தெரியுமா?
“நன்றி மறப்பது நன்றன்று” என்று சொல்வார்கள். அப்படி தனக்கு நன்றி செய்த விஜயகாந்த்துக்கு பதில் நன்றி செய்யும் வேலையில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய்.
‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தொடர்ந்து அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்தும் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
அந்த நேரத்தில் தான் ‘செந்தூரப்பாண்டி’ என்ற படத்தை விஜய்யை வைத்து எடுத்தார் எஸ்.ஏ.சி. அதில் எஸ்.ஏ.சியின் நட்புக்காக விஜய்யுடன் இணைந்து நடித்தார் கேப்டன் விஜயகாந்த். அந்தப்படம் விஜய்யின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வெற்றிப்படமானது.
தொடர்ந்து ‘பூவே உனக்காக’ உட்பட அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து இன்றைக்கு தமிழில் முதல் ஐந்து இடங்களில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் மகன் சண்முகப் பாண்டியன் உடன் விஜயகாந்த்.
இதற்கிடையே ‘சகாப்தம்’ படத்தின் மூலம் தனது இளைய மகன் சண்முகப் பாண்டியனை தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘மதுரை வீரன்’ படம் ஓரளவுக்கு அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இருந்தாலும் ஒரு பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் சண்முகப் பாண்டியன்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் செந்துரப் பாண்டி படத்தில் தன்னுடைய சினிமா கேரியருக்காக உதவி செய்த விஜயகாந்த்துக்கு பதில் உதவி செய்யும் விதமாக விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியனை வைத்து தானே ஒரு படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு அதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறாராம் நடிகர் விஜய். இந்தப் படத்துக்காக புதுமுக இயக்குனர்களை வரவழைத்து சீரியஸாக கதைகள் கேட்டு வருகிறார்.
விஜய் கதை கேட்க அழைக்கிறார் என்று தகவல் வரவும் உற்சாகமாகக் கிளம்பிப் போகும் இயக்குனர் வட்டம் அது சண்முகப் பாண்டியனுக்கு என்று தெரிந்ததும் அப்செட் ஆகி வெளியேறுகிறார்களாம். இதனால் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் யார் ஹீரோ? என்ற விஷயத்தை முதலிலேயே சொல்லித்தான் கதையைக் கேட்கிறாராம்.
கதை எந்தளவுக்கு முக்கியமோ? அதே அளவுக்கு தொழில்நுட்ப விஷயங்களும் முக்கியம் என்பதால் இப்படத்தில் வேலை செய்யும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பிரபலமானவர்களையே படத்தில் கமிட் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.