தமிழகம்

தமிழறிஞர் ம.லெனின் தங்கப்பா இன்று(மே 31) அதிகாலை புதுச்சேரியில் காலமானார்: தமிழ் அறிஞர்கள் அஞ்சலி

புதுச்சேரி: புதுச்சேரியில் வாழ்ந்துவந்த பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா அவர்கள் 31.05.2018 அதிகாலை 1. 30 மணியளவில் தம் 84 வது வயதில் காலமானார். இவர் தமிழுக்கு பல அரிய பணிகள் ஆற்றியுள்ளார்.
 

உடல்நலம் குன்றி, மருத்துவம் பார்த்து வந்த பேராசிரியர் தங்கப்பா அவர்கள் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இயற்கை எய்தியமை தமிழறிஞர் உலகத்தைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களின் ஆசிரியராகவும், இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், தெளிதமிழ் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும், பல்வேறு தமிழ்நலம் சார்ந்த போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய செயல்மறவராகவும், வாழ்வியல் பேரறிஞராகவும் விளங்கிய தங்கப்பாவின் பணிகள் தமிழுலகில் என்றும் போற்றத்தக்க பணிகளாகும்.

 

தமிழ் இலக்கியம் பயின்றவர்

நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934 இல் பிறந்தவர் ம.இலெனின் தங்கப்பா. இவர்தம் பெற்றோர் புலவர் ஆ. மதன பாண்டியன், இரத்தினமணி அம்மையார். தந்தையாரின் இளமைக்கால கல்விப் பயிற்றலில் இயற்கையாகவே தமிழ்ப்புலமை கைவரப் பெற்றவர் தங்கப்பா. பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. அப்பாடல்களின் ஓசை உள்ளத்தில் பதிந்ததால் தங்கப்பா இயற்றும் பாடல்கள் மிகச்சிறந்த ஓசையின்பம் கொண்டனவாக விளங்குகின்றன. இளங்கலைப் பொருளியல் பயின்றவர், பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.
 

சிறந்த மொழிபெயர்ப்பாளர்

மாணவப் பருவத்திலேயே மொழிபெயர்ப்புப் பணிகளில் விளையாட்டாக ஈடுப்பட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். கல்வி கற்றவுடன் தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார் . பின்னர்ப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளும், பிறகு புதுச்சேரி அரசுக்கு உரிமையான கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரிந்தார்.
 

அறிஞர்களுடன் தொடர்பு

தம் பிள்ளைகளுக்குச் செங்கதிர், விண்மீன், இளம்பிறை, மின்னல் எனப் பெயரிட்டுள்ள பாங்கு ஒன்றே இவர்தம் இயற்கை ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும். மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்து தொடக்க காலத் தென்மொழி வளர்ச்சிக்கு உழைத்தவர். தமிழ் இன முன்னேற்றத்திற்கானஅமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். பாவேந்தரின் குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர்.
 

ஆங்கில இதழ்கள்

தமிழ்மொழி, இனம் சார்ந்த கொள்கைகளையும் இயற்கை,அன்பு இவற்றை வலியுறுத்தியும் மிகுதியாக எழுதியுள்ளவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிக்கு அறிமுகம் செய்த வகையிலும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்து வழங்கிய வகையிலும் என்றும் நினைவுகூரத் தக்கவர். தமிழ் இதழ்களில் எழுதுவதுடன் ஆங்கில இதழ்களிலும் எழுதி வருபவர். இவற்றுள் Caravan,Poet, Cycloflame (u.s.a), Modern Rationalist,Youth Age, New Times, Observer முதலியன குறிப்பிடத்தகுந்தன.
 

இயற்கை எய்தினார்

புதுச்சேரி அரசு வழங்கிய விருதை அவ்வரசு தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடாததைச் சுட்டிக்காட்டித் திருப்பி வழங்கியவர். புதுச்சேரி தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், தில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் இருந்த தங்கப்பா, இன்று அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

 

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker